பேட்டிகள்

காங்கிரஸ் போட்ட விதையை பா.ஜ.க. அறுவடை செய்கிறது

முத்துமாறன்

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான டாக்டர் செல்லகுமாரிடம்  இந்திய அரசியல் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்  பற்றி  அந்திமழைக்காகப் பேசினோம். பீகார் தேர்தல்கள் முதல் ராகுல்காந்திவரை தெளிவாக பதில் தந்தார்.

பீகார் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மதவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து சந்தித்த தேர்தல் அது. அதற்கு மக்கள் பேராதரவு அளித்தார்கள்.  நாட்டின் பிரதமரே 33 முறை அங்கே வந்து பேசி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என்று பெரிய அளவில் ஆட்களை கொண்டுவந்து பாஜக சந்தித்த தேர்தல் அது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாஜகவின் செயல்பாடுகளை பார்த்திருந்த மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர். இது அகில இந்திய அளவில் எதிர்வரும் காலத்தில் நடக்கவிருக்கும் அரசியல் இயக்கங்களைத்  தீர்மானிக்கக்கூடிய முடிவு.

ஊழல் குற்றச்சாட்டில் இருக்கும் லாலுவுடன் அவருக்கு எதிர் அரசியல் செய்யும் நிதீஷ்குமார் சேர்ந்தது சந்தர்ப்பவாதமாகத்தானே பார்க்கப்பட்டது?

இப்படிச் சொல்லும்போது சொல்லுபவர்கள் யார் என்று மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா? மத்திய பிரதேசத்தில் 40 உயிர்கள் பலியான வியாமபம் ஊழல், சத்திஸ்கரில் உணவு மானிய ஊழல்,  மகராஷ்டிராவில் 3000 கோடி ஊழல், குற்றவாளி என்று தேடப்படுபவருக்கு நாட்டின் வெளியுறவு அமைச்சரே உதவி செய்தது போன்றவை பற்றி பிரதமர் வாய் திறக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் பீஹாரில் மிகவும் குறைவான இடங்களில்தான் காங்கிரஸ் போட்டியிட முடிந்திருக்கிறதே?

வீடு தீப்பற்றி எரிந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கும் அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கும் தீயை அணைப்பதில்தான் கண்ணோட்டம் இருக்கும். அதனால் மோடி கொண்டுவந்திருக்கும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்கொள்ளத்தான்  தன்னை அழித்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று 43 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பலவீனமானவை என்று எல்லோரும் சொன்னார்கள். அதையும் மீறி மக்கள் காங்கிரஸுக்கு அங்கே வாக்களித்திருக்கிறார்கள். மத்தியபிரதேசத் தில் நடந்த ஒரு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றேகால் லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் தோற்ற தொகுதியில் இன்று அறுபதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளோம்.

நேருவின் பெயரை மறக்கடிக்க பாஜக முயற்சி செய்கிறது என்ற விமர்சனம் உள்ளதே?

ஆமாம். பாஜகவுக்கு இந்திய சுதந்தரப்போராட்ட வரலாறே இல்லையே.அது காங்கிரசுக்குத்தானே இருக்கிறது. அந்த காழ்ப்புணர்ச்சியில்தான்  நேருவை இருட்டடிப்பு செய்ய விழைகிறார்கள். ஆனால் அவர்களின் துரதிருஷ்டம் பட்டேல் அவர்களும்  காங்கிரஸ் காரர்தான். இந்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்சைதடை செய்யும் உத்தரவில் கையெழுத்து இட்டதும் அவர்தான் என்ற வரலாறும் இருக்கிறதே. இவர்கள் வீர்சாவர்க்கரை வேண்டுமானால் தங்கள் சுதந்தரபோராட்ட வரலாற்றில் சொல்லலாம். ஆனால் அவரும்கூட சுதந்தரப் போரில் கலந்துகொள்ள மாட்டேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்தவர்தான். ஏன் வாஜ்பாயி கூட அப்படி எழுதிகொடுத்தவர்தான். நேரு ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார். மோதிலால் நேரு, கமலா நேரு என்று எல்லோரும் சிறையில் இருந்த வரலாறு காங்கிரசுடையது.  ஒருபோதும் சுயநலத்துக்காக ஆங்கிலேயர்களிடம் சுதந்தரப்போரில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிவிட்டு நேரு வெளியே வந்தவர் அல்ல.  ஆக இவர்கள் இப்போதைய தலைமுறையிடம் வரலாற்றை  மறைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா திட்டங்கள் எப்படிச் செயல்படுகின்றன? அவை பாஜக அரசின் முக்கியத் திட்டங்களாக  சொல்லப்படுகின்றன அல்லவா?

இத்திட்டங்கள் முன்பே காங்கிரஸ் கட்சியால் நவ நிர்மாண் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டு நிதி உதவி செய்யப்பட்டவை. அவற்றின் தொடர்ச்சிதான் இவை. அந்த திட்டங்களின் பலன்களை அறுவடை செய்யும் நேரத்தில் மக்கள் அதை உணர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கில்தான் இன்னொரு பெயர் சூட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஸ்வச் பாரத்துக்காக 16000 கோடிரூபாய் செலவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த செலவின் விளைவுகள் என்ன? எங்கே எந்த ஊருக்கு நகருக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? இப்படி செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. வெறும் விளம்பரத்துக்காக செலவு செய்வதில் என்ன பலன் கிடைக்கும்? 1992-ல் நரசிம்மராவ் ஆட்சியிலேயே மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் கொடுமை அகற்ற நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு ஒரு வாரியமே டெல்லியில் உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் கழிவறைகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் முக்கியத்துவத்தைத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காக எங்கள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நாட்டில் கோயில்களை விட கழிப்பறைகள்தான் அதிகம் தேவைப்படுகின்றன என்று சொன்னார். அப்போது இதை மதரீதியில் இதே பாஜகதான் எதிர்த்தது. இது மறுக்கமுடியாத வரலாறு. மோடிதான் இதைக் கண்டுபிடித்தமாதிரி பிரச்சாரம் செய்கிறாரே அது தவறு. இது காங்கிரஸின் திட்டம்தான். யாரோ போட்ட விதையை அறுவடை செய்யும் நேரத்தில் வந்து சாப்பிடுவதுபோல் இது!

அமீர்கான் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றி?

நாட்டில் சுதந்தரம் வந்தபின்னர் கருத்துசுதந்தரம் பேச்சு சுதந்தரம் உண்டு. தனிமனிதனைப் பாதிக்காத வரை இதற்கு உரிமை உண்டு.  கருத்துசொல்கிறவர் யார் என்று பார்க்கவேண்டியது இல்லை. கருத்தின் ஆழம்தான் பார்க்கவேண்டும். அமீர்கான் இஸ்லாமியர் என்பதால் இதைச் சொன்னார் என்று பார்த்தால் கமலஹாசன் இதே கருத்தை சென்ற ஆண்டு சொன்னார். ஏன் அதைக் கண்டிக்கவில்லை? இருவரின் கருத்தும் ஒன்றுதான். அரசியல் சுயலாபத்துக்காக, பிரித்தாளும் சூழ்ச்சிகாக பயன்படுத்துகிறார்களே தவிர அந்த கருத்தின் ஆழத்தைப் பார்க்க மறுப்பது வேதனைக்கு உரியது.

ராகுல்காந்தியிடம் கட்சித் தலைமையை அளிப்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது?

 தயக்கம் என்பதே இல்லை. ராகுல்காந்திதான் காங்கிரசின் எதிர்காலம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஒருகாலகட்டத்தில் இதை எதிர்த்த பஞ்சாபின் அமெரிந்தர் சிங் கூட இபோது ராகுல் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறி இருக்கிறார். சில காரணங்களாக காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா இருக்கிறார். சீக்கிரத்தில் ராகுல்காந்தி தலைவராக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக  காங்கிரஸ் பிரமுகர்கள் டெல்லி சென்று புகார் கூறி இருக்கிறார்களே? அவரது தலைமையைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த குழுவில்  நீங்கள் இருந்தீர்களா?

நான் செல்லவில்லை. காங்கிரஸில் தனிமனிதர்களை முன்னிறுத்தி செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டிருக்கின்றன என்பதுதான் கடந்தகால வரலாறு. சோனியா, ராகுல், நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோருக்குத்தான் மக்கள் செல்வாக்கு உள்ளது. அவர்கள் பெயரைச் சொல்லித்தான் வாக்குகளை பெறமுடியும். ஆனால் ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்.

டிசம்பர், 2015.